உலகளாவிய கவிஞர் – மகாகவி சுப்ரமணிய பாரதியார்
உலகளாவிய கவிஞர் – மகாகவி சுப்ரமணிய பாரதியார்
-கவிஞர் Dr. S. பத்மபிரியா, சென்னை, பாரதம்.
Translation by Thiru. S. Sathya Narayanan.
மகாகவி சுப்ரமணிய பாரதியார் ஒரு நிகரற்ற கவிஞர். எளிமையான நடையில் தரமான கருத்துகளை கொண்ட அவருடைய படைப்புகள் மக்களை வெகுவாகக் கவர்ந்தன. சக்திவாய்ந்த அவரது எழுத்துக்கள் பாகுபாடு இன்றி - இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள், பணக்காரர்கள் மற்றும் ஏழைகள், ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரையும் கவர்ந்தன. இந்திய மக்களுக்கு ஒருவித சக்தி, உற்சாகம் மற்றும் தேசபக்தி உணர்வை பெருக்கியது. சுப்பிரமணிய பாரதியார் ஒரு உலகளாவிய கவிஞராகவும் எழுத்தாளராகவும் இருந்தார். காலத்தை வென்ற அவருடைய எழுத்துக்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொருந்தியதாக இருக்கிறது.
ஏகாதிபத்திய ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த பாரதத்தின் மெட்ராஸ் பிரசிடென்சியில் உள்ள திருநெல்வேலி பகுதியில் உள்ள எட்டயபுரத்தில், சி.சுப்ரமணியன் ஐயராக பிறந்தார். தற்போது, எட்டயபுரம், சுதந்திர பாரதத்தில், தமிழ்நாடு மாநிலம், தூத்துக்குடி மாவட்டத்தின் கீழ் வருகிறது.
பாரதியார் தனது பதினோராவது வயதில், தமிழில் தனது முதல் கவிதையை எழுதினார். எட்டயபுரம் அரண்மனையில் சில காலம் பணிபுரிந்தார். பிறகு, காசிக்குப் பயணம் செய்து சில ஆண்டுகள் அங்கேயே வாழ்ந்தார். அவர் இந்தி மற்றும் சமஸ்கிருதம் உட்பட பல மொழிகளைக் கற்று தேர்ந்தவர். சி.சுப்பிரமணியன் தீண்டாமையை எதிர்த்த பிராமணர் ஆவார். 'பாரதி' என்ற பட்டம் அவரது புலமை மற்றும் விவாதத் திறனுக்காக அவருக்குப் வழங்கப்பட்டது. இவரும் காளிதாசரைப் போன்று, பெரும் கவிஞர் என்று பொருள்படும் 'மகாகவி' எனக் கருதப்பட்டார். அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாகவும் இருந்தார்.
வந்தே மாதரம், ஜெய் பாரத் உள்ளிட்ட பல தேசபக்தி கவிதைகளை எழுதினார். தமிழ்நாட்டின் பெருமை மற்றும் தமிழ் மொழியின் பெருமை குறித்து பல கவிதைகளை எழுதியுள்ளார். அவரது கவிதையான 'செந்தமிழ்நாடு', தமிழ் கீதமாக இருக்க தகுதியானது. பக்திப் பாடல்களையும் சிறுகதைகளையும் எழுதியுள்ளார். தமிழ் மொழியின் முதல் சிறுகதை ஆசிரியராகக் கருதப்படுகிறார். பகவத் கீதைக்கு அவர் எழுதிய விளக்கம் பிரசித்தி பெற்றது. தனது சுயசரிதையையும் எழுதியுள்ள அவர், ஒரு மேதையாகக் கருதப்படுகிறார்.
'சுதேசமித்திரம்' என்ற தமிழ் நாளிதழின் உதவி ஆசிரியராகவும் பணியாற்றினார். 'இந்தியா' என்ற தமிழ் வார இதழையும், 'பால பாரதம்' என்ற ஆங்கில நாளிதழையும் தொகுத்து வழங்கினார். அவர் ஸ்ரீ அரபிந்தோ உடன் 'ஆர்யா' மற்றும் 'கர்ம யோகி' இதழ்களில் பணிபுரிந்தார். பாரதி இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்டவர். பெண் ஒடுக்குமுறையை எதிர்த்தார்.
கருணை, இரக்கம், அன்பு, தேசபக்தி, நன்னடத்தை, அமைதி, நல்லிணக்கம் நிறைந்த உலகத்தை மகாகவி சுப்பிரமணிய பாரதியார் கற்பனை செய்தார். அவரது எழுத்துக்கள், அத்தகைய எண்ணங்களை உள்ளடக்கியதாக இருப்பதால்தான் பெருமளவில் இன்றும் மதிக்கப்படுகிறது.
ஊக்கம் மிக்க அவரது எழுத்துக்கள், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி உட்பட, உலகெங்கும் பலரால் பாராட்டப்பட்டது. வரப்போகும் யுகங்களிலும் அவர் நிலைத்து நிற்பார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
Comments
Post a Comment